6 மாதத்தில் 6 பேருந்தில் 145 பேர் தீயில் கருகி பலி எதிரொலி; ‘ஸ்லீப்பர் கோச்’ பஸ் தயாரிக்க தனியார் ‘பாடி’ பில்டர்கள் தடை: 61 புதிய திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு

 

புதுடெல்லி: நாடு முழுவதும் பேருந்து தீ விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில், ஸ்லீப்பர் கோச் பேருந்துகள் தயாரிப்பில் புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஒன்றிய அரசு, தனியார் பாடி பில்டர்களுக்கு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட ‘ஸ்லீப்பர்’ பேருந்துகளில் நடந்த தீ விபத்துகளில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆறு பேருந்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளுக்குக் காரணம் பேருந்துகளின் தரமற்ற வடிவமைப்பு மற்றும் மலிவான பொருட்களின் பயன்பாடு என விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தனியார் மற்றும் உள்ளூர் பாடி பில்டர்கள் கட்டும் பேருந்துகளில் அவசர வழி குறுகலாக இருப்பதும், தீப்பிடிக்கும் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதும் விபத்து காலங்களில் உயிர்ச்சேதத்தை அதிகரிக்கிறது.

இந்த நிலையில், ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பேருந்து பாடி பில்டர்கள் மற்றும் பதிவு அதிகாரிகளின் ஊழல் மற்றும் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விபத்துகளைத் தடுக்கும் விதமாக, இனிமேல் ஸ்லீப்பர் பேருந்துகளை அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பா போக்குவரத்து மேம்பாட்டுக் கவுன்சிலின் 43வது கூட்டம் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இனிமேல் ஸ்லீப்பர் பேருந்துகளை அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும்.

சாலை ஓரங்களில் உள்ள பட்டறைகளில் பேருந்துகளை வடிவமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடிவமைப்புக்கும் மூன்றாம் தரப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகளிலும் தீயணைப்பு கருவிகள், அவசரகால விளக்குகள் மற்றும் ஓட்டுநர் சோர்வைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து வடிவமைப்புக்கான AIS-052 மற்றும் AIS-153 ஆகிய குறியீடுகள் கடுமையாக அமல்படுத்தப்படும். பேருந்துகளில் இரண்டு கதவுகள் மற்றும் இரண்டு அவசர ஜன்னல்கள் என மொத்தம் நான்கு வழிகள் இருக்க வேண்டும். தீப்பிடிக்காத பொருட்களை மட்டுமே இருக்கைகள் மற்றும் திரைச்சீலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

பேருந்துகளில் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், வாகனங்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ‘V2V’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், மோட்டார் வாகனச் சட்டத்தில் 61 புதிய திருத்தங்களைக் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகப் பேருந்துகளை மாற்றியமைக்க அனுமதித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய சுயச் சான்றிதழ் முறையை ரத்து செய்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்த AIS-052 என்ற பேருந்து வடிவமைப்புக்கான தேசியத் தரநிலையைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்கத்தில் உள்ள பழைய ஸ்லீப்பர் பேருந்துகளிலும் தீ விபத்தைக் கண்டறியும் கருவிகள், அவசரகால விளக்குகள் மற்றும் சுத்தியலுடன் கூடிய அவசர வழிகள் போன்ற பாதுகாப்பு வசதிகளை உடனடியாகப் பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: