நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு: ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து கட்சியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை எடுத்துச் சென்றார். நிலக்கரி கடத்தல் ஊழல் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்திய நிலையில், கணினித் தரவுகள் மற்றும் தேர்தல் வியூகங்களைத் திருடவே ஒன்றிய அரசு இந்தச் சோதனையை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தாவில் முதல்வர் மம்தா தலைமையில் போராட்டப் பேரணி நடைபெற்றது. 8பி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஹஸ்ரா மோர் நோக்கி பேரணி நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் படை சூழ முதல்வர் மம்தா பேரணியாக சென்றார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு மத்திய அமைப்புக்களை தவறாக பயன்படுத்துகின்றது என்று முதல்வர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து அங்கு நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ”உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மூத்த பாஜ தலைவர்கள் நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த பணத்தால் பயன் அடைந்தனர். தேவைப்பட்டால் பொது வெளியில் அதற்கான ஆதாரங்களை வெளியிட முடியும். பிரதிக் ஜெயின் வீட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவராகவே நான் நடந்துகொண்டேன். சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. என்னை கொல்வதற்கு முயன்றால் என்னை பாதுகாத்துக் கொள்வதற்கு எனக்கு உரிமை இல்லையா? என் கட்சியே இல்லை என்றால் நான் எப்படி மக்களுக்காகப் போராடுவேன்?” என்றார்.

இதேபோல் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகம் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று திடீரெனத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதை உடனே நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார்கள். திரிணாமுல் எம்பிக்களை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றினார்கள். இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் இது என்ன வகையான ஆணவம் அமித் ஷா? ஜனநாயகத்தை நசுக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தாக்குவதற்கு உங்கள் டெல்லி காவல்துறையை பயன்படுத்துகிறீர்களா? உங்கள் இந்தியாவில் எதிர்ப்பு குரல்களை இப்படித்தான் அடக்குவீர்களா? என்று சாடியுள்ளது.

* உயர்நீதிமன்றத்தில் திரிணாமுல் மனு
ஐ-பேக் நிறுவன தலைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நேற்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதற்கும், பரப்புவதற்கும் தடை விதிக்கக் கோரி அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நேற்று விசாரிக்கப்பட இருந்த நிலையில் நீதிமன்ற அறையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக வருகிற 14ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக கொல்கத்தா, பிதான்நகர் காவல்நிலையத்திலும் முதல்வர் மம்தா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* மம்தாவிற்கு எதிராக சிபிஐ விசாரணை
ஐ-பேக் நிறுவன தலைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது முதல்வர் மம்தா, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோதனை நடந்த இடங்களில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள், மின்னணு பதிவுகள் மற்றும் ஆவணங்களை உடனடியாக கைப்பற்றி சீல் வைத்து தடயவியல் பாதுகாப்புக்கு உட்படுத்தி அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வ காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

* உச்சநீதிமன்றத்தால் தான் முடியும்
மாநிலங்களவை எம்பி கபில்சிபல் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு எதிர்க்கட்சி ஆளும் மாநிலமும் ஒவ்வொரு முக்கிய எதிர்க்கட்சி தலைவரும் குறிவைக்கப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் நடப்பது உண்மையிலேயே கவலை அளிக்கிறது. அதுவும் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இது நடக்கிறது. கூட்டாட்சி தத்துவமே அமலாக்கத்துறையின் கருணையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி.‘‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் தைரியமானவர். அவர் ஒரு பெண் புலி. அவர்களை எதிர்த்து திறம்பட போராடுவார். அடிபணிய மாட்டார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* மம்தா மீது சந்தேகம்-பாஜ
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்,‘‘அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், சோதனையின்போது அவர்களிடம் இருந்து ஆவணங்களை பறித்து சென்றதற்காகவும் முதல்வர் மம்தா மீது குற்றம்சாட்டப்படவேண்டும். மம்தா பானர்ஜியின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை சுற்றி பல சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் உள்ளன” என்றார்.

Related Stories: