வகுப்புவாத சம்பவங்களை வங்கதேசம் உறுதியாகக் கையாள வேண்டும்: இந்தியா கண்டிப்பு

புதுடெல்லி: வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: கடந்த சில வாரங்களாக வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் தீவிரவாதிகளால் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு கவலையளிக்கும் போக்கை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இத்தகைய வகுப்புவாத சம்பவங்களை விரைவாகவும் உறுதியாகவும் கையாள வேண்டும். அரசின் அலட்சியம் குற்றவாளிகளை மேலும் தைரியப்படுத்துகிறது. சிறுபான்மையினரிடையே அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஆழப்படுத்துகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

* சீன நடவடிக்கைக்கு எடும் எதிர்ப்பு ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது
பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள 5,180 சதுர கிலோமீட்டர் இந்தியப் பிரதேசத்தை 1963-ல் சீனாவிடம் சட்டவிரோதமாக ஒப்படைத்தது. இதுபற்றி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியப் பிரதேசம். 1963ல் கையெழுத்திடப்பட்ட சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது. செல்லாதது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

பாகிஸ்தானின் பலவந்தமான மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்தியப் பிரதேசம் வழியாகச் செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளிடம் பலமுறை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கில் தரைவழி யதார்த்தத்தை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் சீனத் தரப்பிடம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை எங்களிடம் உள்ளது ’ என்றார்.

Related Stories: