இருமடங்கு லாபம் தருவதாக ஆசை காட்டி 2 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்

வேலூர், ஜன. 9: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் தருவதாக ஆசை காட்டி 2 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த 27 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘எனக்கு டெல்லியில் இருந்து பூஜா என்ற நபர் டெலிகிராம் மூலம் எனது செல்போன் என்னுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அந்த நபர் ஆன்லைன் இணைப்பை வழங்கி அதிக வருமானம் கிடைப்பதாக உறுதியளித்தார். மேலும் பகுதி நேர ஆன்லைன் வேலை செய்தால் பல மடங்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார். அதை நம்பி அந்த நபர் கொடுத்த அனைத்து வேலைகளையும் முடித்து. அந்த நபர் சொன்னபடி அவரது வங்கி கணக்கிற்கு ரூ.15 லட்சத்து 32 ஆயிரத்து 384 செலுத்தினேன்.
அதோடு அவர் சொன்னபடி பணிகளை முடித்துக் கொடுத்தேன். அதனால் எனக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, மேற்கண்ட மோசடி பேர்வழியிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகழ் பெற்ற தனியார் கம்பெனியின்அதிகாரி எனக்கூறிக்கொண்டு எனது செல்போன் எண்ணுக்கு ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பினார். அந்த நபர் ஒரு ஆன்லைன் லிங்க்கையும் வழங்கினார். அதில் இந்த கம்பெனியில் நீங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தகவல் இருந்தது. இதனை நம்பி நான் பல தவணைகளில் ரூ.9 லட்சத்து 88 ஆயிரத்து 311 பணத்தை அவரது வங்கி கணக்குக்கு அனுப்பினேன். பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் மேலும் பணம் அனுப்பினால் உங்களது மொத்த பணத்தையும் திருப்பித் தருவேன் என்று கூறினார். ஆனால் பணத்தை திருப்பித் தரவில்லை. பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே எனது பணத்தை திருப்பி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி செய்த பரிந்துரையின்பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: