சத்துணவு மையங்களில் கலவை சாதம் பட்டியலை வெளியிட்டது அரசு நடப்பு 2026ம் ஆண்டுக்கான

வேலூர், ஜன.9: தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் நடப்பு 2026ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் கலவை சாதம் குறித்த விவரங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டமானது, கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது. இதனால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் என்ற பெயரால் இத்திட்டம் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், குழந்தை தொழிலாளர் நல மையங்கள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் என மொத்தம் 65 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. இம்மையங்கள் மூலம் சுமார் 50 லட்சம் குழந்தைகள் சத்துணவை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 1141 தொடக்கப்பள்ளிகளில் 94 ஆயிரத்து 763 குழந்தைகளும், 415 நடுநிலைப்பள்ளிகளில் 77 ஆயிரத்து 271 குழந்தைகளும், 361 உயர்நிலைப்பள்ளிகளில் 36 ஆயிரத்து 228 மாணவ, மாணவிகளும், 186 மேல்நிலைப்பள்ளிகளில் 14 ஆயிரத்து 870 மாணவ, மாணவிகளும், 97 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 8 ஆயிரத்து 96 மாணவ, மாணவிகளும், 177 சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 29 ஆயிரத்து 530 மாணவ, மாணவிகளும், 39 குழந்தை தொழிலாளர் நல மையங்களில் 815 குழந்தைகளும் என மொத்தம் 2416 சத்துணவு மையங்களில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 573 பேர் சத்துணவால் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு, கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதை தவிர்த்து, குழந்தைகளின் தற்கால தேவைகள்மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில், சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கொண்டை கடலை புலாவ், கறிவேப்பிலை சாதம், மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறி சாதம், தக்காளி சாதம் என வழங்கப்படுகிறது. இதுதவிர ஆம்லேட், முட்டை பொடிமாஸ், முட்டை வறுவல், அவித்த முட்டை என 4 வகையாக முட்டை 5 நாட்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலவை சாதம் வழங்குவதற்கான அட்டவணையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2026ம் ஆண்டு முதல் மற்றும் 3வது வாரத்தில் வழங்கப்படும் சத்துணவு பட்டியல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, முதல் மற்றும் 3வது வாரம் திங்கட்கிழமை சாதம், காய்கறி சாம்பார், மிளகு முட்டையும், செவ்வாய்கிழமை சாதம், கருப்புக் கொண்டை கடலை கிரேவி, தக்காளி மசாலா முட்டையும், புதன்கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டையும், வியாழக்கிழமை சாதம், சாம்பார், வேகவைத்த முட்டையும், வெள்ளிக்கிழமை சாதம் கீரைக்கூட்டு, பருப்பு, மசாலா முட்டை, வறுத்த உருளைக்கிழங்கும் வழங்கப்படுகிறது. 2வது மற்றும் மற்றும் 4வது வாரம் திங்கட்கிழமை சாம்பார் சாதம் எனப்படும் பிசிபேளாபாத், வெங்காயம், தக்காளி மசாலா முட்டையும், செவ்வாய்கிழமை சாதம், காய்கறி சாம்பார், மிளகு முட்டையும், புதன்கிழமை புளிசாதம், தக்காளி முட்டை மசாலாவும், வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், சுண்டல், தக்காளி முட்டையும், வெள்ளிக்கிழமை சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் வறுத்த உருளைக்கிழங்கும் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: