வக்கீலை அனுப்ப தூது: சிபிஐயிடம் நடிகர் விஜய்யை மாட்டி விட்ட ஆதவ்; கடுப்பில் தவெகவினர்

சென்னை: நடிகர் விஜய்யை சிபிஐயிடம் ஆதவ் மாட்டிவிட்டுள்ளதாக தவெகவின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய்யிடம் வருகிற 12ம் தேதி விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இது தவெகவில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. தமிழக அரசு ஆரம்பத்தில் விசாரணை நடத்தியது. சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அவரும் நேர்மையாக விசாரித்தார். அதற்குள் தவெகவினர் தமிழக அரசு மீது பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளை வலைதளங்கள் மூலம் பரபரப்பினர்.

இந்தநிலையில்தான் உச்சநீதிமன்றம், தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தமிழக அரசிடம் விசாரணை இருக்கும்வரை விஜய்யை நோக்கி, விசாரணை செல்லவில்லை. ஆனாலும் தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி வந்தனர். ஆனால் தற்போது தமிழக போலீசை விட பல மடங்கு வேகமாகவும், கடுமையாகவும் விசாரணையை நடத்தி வருகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார் ஆகியோரிடம் பல நாட்கள் விசாரித்தனர். அப்போது கூட ஒன்றிய அரசுக்கு எதிராக தவெகவினர் வாய் திறக்கவில்லை. விஜயும் அமைதியாக இருந்தார். இதுவரை ஒன்றிய அரசு குறித்து ஒரு குற்றச்சாட்டு கூட தெரிவிக்கவில்லை.

ஆனால் தற்போது விஜய்க்கே சம்மன் அனுப்பப்பட்டு விட்டது. கூட்டணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகத்தான் இதுபோன்று செய்வதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் விஜய் ஆஜராகாமல் வக்கீல் அல்லது அவரது சார்பாக யாராவது ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளிடம் தவெகவினர் கேட்டு வருகின்றனர். ஒன்றிய அரசிடமும் உதவி கேட்டுள்ளனர். ஆனால் கூட்டணிக்கு சம்மதித்தால்தான் உதவி செய்ய முடியும் என்று கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த கோபம் எல்லாம் ஆதவ் மீது விஜய்க்கு திரும்பியுள்ளது. தமிழக போலீசிடம் விசாரணை இருந்தால், அவர்கள் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு சொல்லலாம். நீதிமன்றமும் செல்லலாம். அதேநேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட, எந்த தலைவராவது தனது தொண்டன் சாக வேண்டும் என்று விரும்புவானா என்று ஆறுதல் வார்த்தை கூறியிருந்தார். இதனால் அவரும் விசாரணை விஜய்யை நோக்கி நோக்கி செல்லாமல் பார்த்துக் கொள்வார். ஆனால் சிபிஐ அப்படி இல்லை. கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை இருக்கும்.

ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் மீதும் சிபிஐ விசாரணை உள்ளது. அதை முடிக்காமல், இன்று வரை இழுத்தடித்து வருகிறது ஒன்றிய அரசு. இந்த வழக்கு இருப்பதால்தான் அவர்களாலும் கூட்டணியை விட்டு வெளியே செல்லாமல் இருக்கிறார்கள். அதே பார்முலாவைத்தான் பாஜகவும் விஜய்யிடம் காட்டத் தொடங்கியுள்ளதாக தவெகவினர் கருதுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஆதவ் அர்ஜூனாதான். அவர்தான் உச்சநீதிமன்றம் செல்லாம் என்று கூறி வழக்குத் தொடர்ந்தார். தற்போது சிபிஐ சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார் என்று விஜய் மற்றும் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றார்களாம். மேலும் ஜனநாயகன் படத்திற்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. படம் 9ம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெளிநாட்டில் படம் வெளியாகிவிடும். அப்படி என்றால் படத்தின் விமர்சனம், காட்சிகள் எல்லாம் வெளியாகிவிடும். மேலும் திருட்டு விசிடிக்களும் வெளியாகும். அதை தடுக்க முடியாது. பல மூத்த நடிகர்கள் விஜய்யால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரசிகர்கள் தற்போது இதுதான் வாய்ப்பு என்று படத்தை லீக் செய்வார்கள். இதனால் தியேட்டருக்கு யாரும் வரமாட்டார்கள். படம் படுதோல்வியை சந்திக்கும். இதனால் ஒன்றிய அரசு தற்போது கடும் நெருக்கடியை கொடுக்கத் தொடங்கிவிட்டது. ஜனநாயகத்தால் ரூ.500 கோடி வரை காலியாகிவிடும். என்ன செய்வது என்று நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: