குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் முக்கியமானது நாகர்கோவில் தொகுதி. மாவட்ட தலைநகர் தொகுதி என்பதுடன், படித்தவர்கள் அதிகம் நிறைந்த தொகுதி. இங்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் மாறி மாறி வெற்றி வாகை சூடி உள்ளன. தற்போது 2026ல் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு நிலவுகிறது. திமுக கூட்டணியில் திமுகவுக்கு இந்த தொகுதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும் தொகுதியை பெறுவதற்கான கடும் முயற்சிகள் நடக்கின்றன. அதிமுக கூட்டணியில் சிட்டிங் என்பதால், பாஜ, இந்த தொகுதியை தக்க வைக்க முயல்கிறது. இந்த தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாரித்து கட்சி தலைமைக்கு கொடுத்த பரிந்துரை பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி பெயர் இல்லை என பா.ஜ.வினரே அடித்து கூறுகிறார்கள். ஆனால், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது மகள் கவுன்சிலர் லிஜாவுக்காக இந்த தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
லிஜா வேட்பாளராகி விட கூடாது என்பதற்கான உள்ளடி வேலைகளை இலை கட்சியினர் சிலர் மறைமுகமாகசெய்து வருகிறார்கள். ஆனாலும் தொகுதி கிடைக்கும் என்று மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உறுதியாக நம்புகிறார். இந்த தொகுதியில் அனைத்து சமூகத்தினருக்கான வாக்குகள் இருந்தாலும் நாடார் சமூகத்தின் வாக்குகள் அதிகம். இதில் கிறிஸ்தவ நாடார், இந்து நாடார் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும். இந்து நாடார் சமூகத்தை சேர்ந்த நாஞ்சில் முருகேசன் தொடக்க காலத்தில் பா.ஜவில் இருந்தவர். இப்போதும் அந்த கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதன் மூலம் பா.ஜவிடம் இருந்து தொகுதியை தட்டி பறித்து விடுவார் என, அவரது விசுவாசிகள் கூறி வருகிறார்கள்.
எம்.ஆர்.காந்திக்கு ஓய்வு கொடுத்து விட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பா.ஜவினர் மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பா.ஜ. பரிவார இயக்கங்கள் சில, நாஞ்சில் முருகேசன் பக்கம் சாய்ந்து நிற்கிறார்கள். இதனால் பா.ஜவிடம், இருந்து தட்டி பறிப்பு நிச்சயம் என்கிறார்கள். இதற்கிடையே தனக்கு மீண்டும் சீட் வேண்டும் என கேட்டு, சிட்டிங் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி சமீபத்தில் டெல்லி வரை சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேச முயன்றுள்ளார். ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் எம்.ஆர். காந்திக்கு சீட் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுவும் தனக்கு பலமாக அதிமுக மாஜி எம்.எல்.ஏ. தரப்பு கருதுகிறது.
