ஆளுநருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு: அமைச்சர்கள் மீது புகார் அளித்தார்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை திடீரென சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை அளித்தார். தமிழக சட்டப்பேரவை வரும் 20ம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமித்ஷாவை அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். அதே நேரம் எடப்பாடி சந்திக்க மறுத்து விட்டார். இந்த பிரச்னை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கவர்னரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் கவர்னரை சந்தித்து திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வழங்கினோம். கடந்த 4½ ஆண்டில் பல்வேறு துறைகளில் அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் விளக்கினோம். உரிய ஆதாரம் உள்ளதால் உடனடியாக விசாரணை நடத்தவும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம். கடந்த 4½ ஆண்டுகளில் திமுக அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதுவரை ரூ.4 லட்சம் கோடி கடன் அளவு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். 2021ல் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் தற்போது பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏன் ரூ.5 ஆயிரம் அறிவிக்கவில்லை. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக அடுத்தடுத்த அறிவிப்புகளை திமுக வெளியிடுகிறது. வருகிற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: