இலவச செல்போன் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் வேலூரில் பரபரப்பு பார்வையற்ற, செவித்திறன் குறைந்த அனைவருக்கும்

வேலூர், ஜன.26: பார்வையற்ற, செவித்திறன் குறைந்த அனைவருக்கும் இலவச செல்போன் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வேலூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் செல்போன்கள் பெற அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு செல்போன் வழங்கப்படாததால் கடந்த 20ம் தேதி காலை வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு இலவச செல்போன் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். ஆனால், செல்போன்கள் குறைவாக வந்துள்ளதாகவும் அனைவருக்கும் தற்போது வழங்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் 25ம் தேதி செல்போன் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று காலை 10 மணி முதல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் 300க்கும் மேற்பட்டோர் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு குவிந்தனர்.

அப்போது, ‘செல்போன்கள் குறைவாக வந்துள்ளது. மேலும் அரசின் ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி தகுதிவாய்ந்தவர்களுக்கே வழங்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு ‘நாங்கள் பல பகுதிகளில் இருந்து வந்துள்ளோம். இங்கு வந்த அனைவருக்கும் செல்போன் வழங்கியே தீர வேண்டும்’ என்று மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினர். தொடர்ந்து அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் மாற்றுத்திறனாளிகளிடம் பேசி அவர்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அழைத்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் சமாதானத்தை ஏற்க மறுத்ததுடன், வந்த அனைவருக்கும் செல்போன் வழங்கியே தீர வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கதுரை, ‘அரசு விதிமுறைப்படி தகுதியான 250 பேருக்கு மட்டுமே செல்போன்கள் வந்துள்ளது. எல்லோருக்குமே வழங்க முடியாது’ என்றார். அதற்கு இன்ஸ்பெக்டர், ‘நீங்கள் செல்போனுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை கொண்டு வந்து அதை அனைவர் முன்னிலையிலும் அறிவித்து வழங்குங்கள்’ என்று அறிவுறுத்தினார். அதையேற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பட்டியலை வாசித்தார். அந்த பட்டியலில் 10 பேர் மட்டுமே அங்கிருந்தனர். அவர்களுக்கு மட்டும் செல்போன் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சொல்லியபடி அனைவருக்கும் செல்போன் வழங்கப்பட வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம் என்று அங்கேயே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>