டெல்லி கலவர வழக்கில் உமர்காலித், ஷர்ஜீலுக்கு ஜாமீன் மறுத்தது உச்ச நீதிமன்றம்: வேறுபட்ட குற்றச்சாட்டு என்று தீர்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை( சி.ஏ.ஏ ) ஆதரித்தும், எதிர்த்தும் டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு, அது மிகப்பெரிய கலவரமாக கடந்த 2020ம் ஆண்டு வெடித்தது. குறிப்பாக இரு தரப்பினரும் கல்வீச்சு, தீவைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர். இதில், இரண்டு போலீஸ்காரர்கள் உள்பட மொத்தம் 53 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் தலைவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாதிமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரெஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோர் மீது உபா மற்றும் ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் \\”பெரிய சதி\\” என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட நபர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில்,‘‘டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக சிறை காவலில் இருப்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

மேலும் கலவரங்களுக்குத் நாங்கள் காரணம் கிடையாது. என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு கடந்த மாதம் 10ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா.பி.வராலே ஆகியோர் வழங்கிய தீர்ப்பில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீண்டகால சிறைவாசத்திற்கான நிவாரணமாக ஜாமீன் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

அதாவது நீண்ட நாட்களாக சிறையில் வைக்கப்பட்டு இருப்பதால் தங்களது அடிப்படை உரிமைகள், அரசியல் சாசனப் பிரிவு 21ன் கீழ் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு ஒருபோதும் தனித்து செயல்படுவதாகப் புரிந்துகொள்ளப்பட முடியாது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில், தாமதம் என்பது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படாது. குறிப்பாக டெல்லி கலவரம் தொடர்பான விவகாரத்தில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வேறுபாடு உள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து மனுதாரர்களையும் ஒன்றாக கருத முடியாது. குறிப்பாக மேல்முறையீட்டு மனுதாரர்களான உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பு ஆவணங்கள் முதன்மையான குற்றச்சாட்டை வெளிப்படுத்தி உள்ளதில் உச்ச நீதிமன்றம் முழு திருப்தி அடைகிறது. யு.ஏ.பி.ஏ (உபா) பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. இதனால், அவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. சாட்சிகளின் விசாரணை முடிந்தவுடன் அல்லது இந்த உத்தரவிலிருந்து ஒரு வருடம் நிறைவடைந்தவுடன், இந்த இரண்டு பேரும் ஜாமீன் வழங்குவதற்கான விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போகச் செய்யாது என்பதால், 12 நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீதமுள்ள ஐந்து பேர்கள் அதாவது குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரெஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோருக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தால் தற்போது ஜாமீன் வழங்கப்படுகிறது. மேற்கண்ட ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த பிறகு ஜாமீனை ரத்து செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தனர்.

* நிராகரிப்பு குறித்த சட்ட விளக்கம்
டெல்லி கலவர விவகாரத்தை பொருத்தவரை அரசியல் சாசன 21வது சட்டப்பிரிவு முக்கிய புள்ளியாக உள்ளது. இதில் விசாரணைக்கு முன்னதாக அனுபவிக்கப்பட்ட சிறை தண்டனை என்பது, அவருக்கு வழக்கில் வழங்கப்படும் தண்டனையாகவோ அல்லது சுதந்திரத்தை பறிக்கும் தன்னிச்சையான முடிவாகவோ கண்டிப்பாக கருத முடியாது. ஏனெனில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே அதன்படி இந்த சட்டப்பிரிவு 43டி உட்பிரிவு 5ன் படி ஜாமீன் வழங்குவதற்கான மற்ற பொதுவான விதிகளில் இருந்து இதற்கு விதிவிலக்கு வழங்கப்படுகின்றது. இதேப்போன்று ஒரு குற்றத்தின் மீது, குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது.

எந்த மாதிரியான தொடர்புகள் இருந்துள்ளது. விசாரணையில் முதன்மையான குற்றங்களை மேற்கொண்டுள்ளதற்கு ஏதேனும் நியாயமான காரணங்கள் இருக்கிறதா ஆகிய கோணத்தில் பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. குறிப்பாக சட்ட விரோத நடவடிக்கைகள், தடுப்புச் சட்டத்தின் கீழ் மரணம் மற்றும் அழிவைத் தரும் நடவடிக்கைகளை மட்டுமல்லாமல், பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கும் அது பொருந்தக்கூடியதாக இருக்கிறது. இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு தான் உமர் காலித் மற்றும் ஷர்ஜில் இமாம் ஆகியோருடைய ஜாமீன் மனுக்களை நிராகரித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு சட்டரீதியான விளக்கத்தை தெரிவித்துள்ளனர்.

Related Stories: