புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்கு அழைத்துச் சென்று காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ், பிரான்சிஸ் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், ‘பல்வேறு உடல் நல கோளாறுகள் ஏற்பட்டு இருப்பதால் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு வெளியில் செல்ல இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிறையில் இருந்து வெளியே சென்று தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற அனுமதி வழங்குகிறோம். இருப்பினும் இதனை நீங்கள் ஜாமீனாக கருதி விடக்கூடாது’ என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக சுகாதார சேவைகள் துறை துணை இயக்குனர் பொன்.இசக்கியின் அறிக்கையை தனக்கு வழங்குமாறு கோரி சிறையில் உள்ள எஸ்ஐ ரகுகணேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி என்.மாலா நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.
