நெல்லை மாவட்ட மணல் கொள்ளையில் அதிரடி கனிமவள உதவி இயக்குநரின் கணவர் சென்னையில் கைது

நெல்லை, ஜன. 24: நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரத்தில் நெல்லை மாவட்ட முன்னாள் கனிம வளத்துறை உதவி இயக்குநரின் கணவரை சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நெல்லை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில் மணல் கொள்ளை தீவிரமாக நடந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நெல்லை மாவட்ட அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பொட்டல் பகுதியில் செயல்பட்ட எம்.சாண்ட் குவாரிக்கு ரூ.9.50 கோடி அபராதம் விதித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் பிரதீக் தயாள் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். அத்துடன் மணல் கடத்தலுக்கு துணை போனதாக விஏஓ ஒருவர்,  எஸ்ஐ உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்.19ம் தேதி மணல் குவாரி தொடர்பாக அம்பை துணை தாசில்தார் மாரி செல்வம் புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார், கல்லிடைக்குறிச்சி அடுத்த பொட்டலைச் சேர்ந்த தனியார் டிவி நிருபர் ஜான் பீட்டர், பால்ராஜ், சங்கரநாராயணன், ஆத்தியப்பன், பாளை என்ஜிஓ காலனியை சேர்ந்த ஜோயல் (55), கேடிசி நகர் சோமசுந்தரம் மகன் சுப்பையா (36), சேரன்மகாதேவியைச் சேர்ந்த முத்துக்குட்டி மகன் முத்துசரவணன் (37) உள்ளிட்ட 8 பேரை இதுவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு கல்லிடைக்குறிச்சி எம் சாண்ட் மணல் விவகாரம் சூடுபிடித்த நிலையில்  விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனிம வளத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த சபிதா, கடந்த ஆண்டு அக்.8ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே இவ்வழக்கில் தலைமறைவாக இருந்துவரும் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இவர்களை பிடிக்கும்பொருட்டு  நெல்லை எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் சென்னை சென்று முகாமிட்டிருந்த  தனிப்படையினர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த முகமது சமீரை நேற்று இரவு கைது செய்தனர். இதையடுத்து அவரை நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. கைதான முகமது சமீர் நெல்லை மாவட்ட கனிம வளத்துறையின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சபிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>