சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் 9வது சித்த தின விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஐந்து மருத்துவ பிரிவுகளில் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சித்த மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை ஆகிய இடங்களில் அலோபதி மருத்துவத்துடன் இணைந்த 1,653 ஆயுஷ் மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன.
இதில், சித்த மருத்துவத்திற்கென 770 நிரந்தரப் பிரிவுகள், 275 தேசிய ஊரக நலவாழ்வு திட்ட பிரிவுகள், 32 ஆயுஷ் நல மையங்கள், 12 பழங்குடியினர் நடமாடும் மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மேலும், 105 ஆயுர்வேதா, 67 யுனானி, 110 ஓமியோபதி, 279 யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் 3 ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ் உள்மருத்துவ பயனாளர் சிகிச்சைக்காக 1,760 படுக்கை வசதிகள் உள்ளன. 2024-25ம் ஆண்டில் மொத்தமாக வெளிமருத்துவ பயனாளர்கள் 3.65 கோடி மற்றும் தினசரி பயனாளிகள் 1 லட்சம்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் எம்ஆர்பி மூலம் உதவி மருத்துவ அலுவலர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்களுக்கு 439 பேர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 565 பேர் என மொத்தம் 1,004 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளுக்கும் தேவையான தரமான மருந்துகளை தடையின்றி வழங்கிட டாம்கால் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஒன்றிய அரசு ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா, ஆயுஷ் அமைச்சகத்தின் இணை செயலாளர் மோனலிசா தாஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் எம்.விஜயலட்சுமி, அரசு உயர் அலுவலர்கள், சித்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
