175வது ஆண்டைத் தொடும் புத்துணர்வு பானம் தேநீர் ஆங்கிலேயர் கண்டுபிடித்து இந்தியரின் வாழ்வாதாரமாக மாறிநிற்கும் தேயிலை: மருத்துவம் சார்ந்த தன்மைகள் இருக்கு

 

காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு கப் தேநீர் அருந்துவது, நம்மில் பெரும்பாலானவர்களின் அன்றாட வாடிக்கை என்றால் அது மிகையல்ல. இந்த தேநீருக்கு காரணமாக இருக்கும் தேயிலை, ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளிகளின்உழைப்பில் உருவாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளை கடந்து நமது பயன்பாட்டுக்கு வருகிறது. இப்படிப்பட்ட தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையிலும், தேநீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் டிசம்பர் 15ம்தேதி சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.

தேயிலை வாரியம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி இந்தியாவில் உற்பத்தியாகும் 80 சதவீத தேயிலை, இங்குள்ள மக்களின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் தண்ணீருக்கு அடுத்த படியாக அதிகமாக அருந்தப்படுவது தேநீர். இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, தற்போது உலகளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், சமூகம் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவராலும் விரும்பப்படும் சமத்துவ பானமாக தேநீர் விளங்குகிறது.

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனாவின் பங்கு 36 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பங்கு 22.6 சதவீதமாகும். உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25 சதவீதமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி தேயிலை உற்பத்தியில் உலகளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அசாம். அசாம் டீ என்பது தற்போதுவரை உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இது ஒருபுறமிருக்க இந்தியாவில் தேயிலை தோட்டங்கள் தோன்றிய வரலாறும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வது இந்தநாளில் மிகவும் அவசியமான ஒன்று என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதுகுறித்து தேயிலை தோட்டங்கள் மற்றும் தேநீர் குறித்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: சீன உற்பத்தியின் ஏகபோகத்தை முறியடிக்க 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு தேயிலை அறிமுகம் செய்யப்பட்டது.

1850ம் ஆண்டு வாக்கில் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருந்த டார்ஜிலிங் நகரை சுற்றிய மலைப்பகுதிகளில் தான், முதன்முறையாக தேயிலை பயிரிடப்பட்டது. முதன்முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம்தேவான். 17ம்நூற்றாண்டு வாக்கில் தான் பிரிட்டனில் தேநீர் மிகவும் பிரபலம் அடைந்தது. இதன்பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை ஆங்கிலேயர் தொடங்கினர். ரயில் நிலையங்களிலும், பொது இடங்களிலும் தேநீர் அருந்துவதை பிரிட்டீஷார் ஊக்கப்படுத்தினர்.

1920ம் ஆண்டுக்கு பிறகு தான், இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பிரபலமானது. பின்னர் அசாமின் சமவெளிப்பகுதிகளில் தேயிலை சாகுபடி வளர்ச்சி பெற்றது. இங்கு காட்டுவகை என்னும் தேயிலை இனம் கண்டு பிடிக்கப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆங்கிலேயர்களால் இறக்குமதி செய்யப்பட்ட ‘காமெலியாசினென்சிஸ்’ என்ற சீன வகையுடன் நெருங்கிய தொடர்புடையது.

இறுதியாக 19ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ்பெற்ற நீலகிரி மாசிப் உள்பட இந்தியாவின் தென்முனையில் மலைப்பகுதிகளில் ஆங்கிலேயர் தேயிலை தோட்டங்களை அமைத்தனர். ஆங்கிலேயர் நம்நாட்டில் திணித்தவற்றுள் முக்கியமானது தேயிலை. அவர்கள் தேவைக்காக நம்மை பயிரிடச்ெசய்தனர். பின்னர் நம்மையே நுகர வைத்து அதன் தேவையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டினர். இந்தநிலையில் சுதந்திரத்திற்கு பிறகு தேயிலையின் தேவை அதிகரித்தது.

இதனால் தேயிலை பயிரிடுவதை இந்திய அரசு ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும், வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது. இதேபோல் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரலாறு உள்ளது. இந்த வகையில் சர்வதேச தேயிலை தினத்தில், இந்தியாவில் 175வது ஆண்டு தொடும் தேயிலையின் வரலாற்றை அறிந்து வைத்திருப்பதும் நமது தலைமுறைகளுக்கு அவசியமான ஒன்று. இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர்.

* மருத்துவம் சார்ந்த தன்மைகள் இருக்கு

உலகளவில் தேயிலை அடிப்படையாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேநீர் வகைகள் பயன்பாட்டில் உள்ளது. மனிதர்களுக்கு பெரும் சவாலாக மாறி வரும் உடல் எடையை குறைப்பதிலும் பெரும்பங்கு தேநீருக்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. தேயிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டவை என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் உலகளவில் தேயிலை ஆதாரமாக கொண்ட தேநீர் என்பது மக்களுக்கு புத்துணர்வு தரும் பானங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலவரப்படி வாழ்க்கை முறையின் அவசியத் தேவைகளில் ஒன்றாகவும் தேநீர் மாறிநிற்கிறது. இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒன்றாகவும் தேயிலை உற்பத்தி துறை விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

* கிரீன் டீக்கு அதிகம் மவுசு

எகிப்தியர்கள் செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே. ஐரோப்பியர்கள் மாலை 3மணியில் இருந்து 6மணிக்குள் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரும் உடல் எடையை குறைப்பதற்காக கிரீன்டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கமீலியா சைனசிஸ் என்ற தேயிலையில் இருந்து தான் கிரீன் டீக்கான டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவும், ஜப்பானும் முதலிடம் வகிக்கிறது. தேயிலை பற்றி படிக்க கூடிய கலைக்கு டேசியோகிராபி என்று பெயர். சீனா,ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளில் தேநீர்விழா நடத்தப்படுகிறது,’’ என்கின்றனர் ேதயிலை குறித்த ஆராய்ச்சியாளர்கள்.

* தமிழர்கள் உழைப்பால் இலங்கை தோட்டங்கள்

இலங்கையின் கண்டி மாவட்டத்தின் லுல்கந்துர பகுதியில் ஜேம்ஸ்ெடய்லர் என்னும் ஆங்கிலேயர் 1837ம் ஆண்டில் 19ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை தோட்டத்தை உருவாக்கினார். இங்கு பயிரிடப்பட்ட 10கிலோகிராம் தேயிலை லண்டன் நகரத்திற்கு சென்றது. அதன்பிறகு இலங்கை தேயிலைக்கான மதிப்பு அதிகரித்தது.

இதனால் 1899ம் ஆண்டுகளில் இலங்கை முழுவதும் 4லட்சம் ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உருவானது. ஆனால் அங்குள்ள சிங்கள மக்கள் தேயிலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து பல்வேறு கட்டங்களில் தமிழர்கள் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தவகையில் இலங்கையின் பெரும் பொருளாதாரத்திற்கு வித்திட்ட தேயிலை தோட்டங்கள் தமிழர்களின் ஈடற்ற உழைப்பை பறைசாற்றி நிற்கிறது என்பதும் நாம் அறியவேண்டிய வரலாறு.

Related Stories: