ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை: தொண்டை மண்டலப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகப் பயணம்!

சென்னை: ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (02/01/2026) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்திப் பேரவையின் அடியார்கள் கோபால், பாலாஜி மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை தென்கைலாய பக்திப் பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

அந்த வகையில், தமிழகத்தின் வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தீப ஆரத்தி காட்டி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதியோகி ரதம் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் சென்னை தாம்பரத்தை வந்தடைந்தது. சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, நங்கநல்லூர், OMR, அடையார், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, மணலி, அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், பூந்தமல்லி, வளசரவாக்கம், ஆவடி ஆகியப் பகுதிகளில் வரும் 8-ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது.

இதில் குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
ஜனவரி 03: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
ஜனவரி 05: திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில்
ஜனவரி 06: வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
ஜனவரி 07: திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்
ஜனவரி 08: திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்

இதற்கு அடுத்ததாக ரதம் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்ல உள்ளது. அதேபோன்று வடக்கு மண்டலத்தில் உள்ள இதர பாடல் பெற்ற தலங்களான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில், அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டிச்சேரி அருகே உள்ள இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில்கள் வழியாகவும் ரதம் பயணிக்கும்.

முன்னதாக, மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கடந்த 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

Related Stories: