பாக். சிறையில் தவிக்கும் 167 கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: பாக்.சிறையில் தவிக்கும் 167 கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே 35வது முறையாக நேற்று அணுமின் நிலையங்களின் பட்டியலை பரிமாறி கொள்ளப்பட்டன. இதேபோல், இருநாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகள், மீனவர்கள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.

இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 391 சிவில் கைதிகள் மற்றும் 33 மீனவர்கள் இந்திய சிறைகளில் உள்ளனர். அதேபோல், இந்தியாவை சேர்ந்த 58 மீனவர்கள் மற்றும் 199 சிவில் கைதிகள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மீனவர்கள், சிவில் கைதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி உள்ளோம்.

தண்டனை காலத்தை நிறைவு செய்த 167 இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகளை உடனடியாக விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பும் பணிகளை துரிதப்படுத்தும்படி பாகிஸ்தானிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டு சிறைகளில் உள்ள 35 சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைப்பதையும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி காரணமாக கடந்த 2013 முதல் தற்போதுவரை பாகிஸ்தான் சிறைகளில் இருந்து 2,661 மீனவர்கள் மற்றும் 71 அப்பாவி பொதுமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 500 இந்திய மீனவர்களும், 13 பிற கைதிகளும் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.

Related Stories: