திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி: 2 நாட்களில் 1.37 லட்சம் பேர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி கடந்த 2 நாட்களில் 1.37 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று முதல் டிக்கெட் இன்றி சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 30ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் நாளான வைகுண்ட ஏகாதசி நாளில் 67 ஆயிரத்து 53 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 2ம் நாளான நேற்றுமுன்தினம் வைகுண்ட துவாதசியையொட்டி 70 ஆயிரத்து 256 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கடந்த 2 நாட்களில் 41 ஆயிரத்து 43 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 8ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதில் முதல் 3 நாட்களுக்கான இலவசமாக ஆன்லைனில் குலுக்கல் மூலம் தேர்வு செய்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி 3ம் நாளான நேற்று இரவு வரை தரிசனம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று முதல் 8ம் தேதி வரை, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட் என ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் வழங்கப்பட்ட பக்தர்களுக்கும், திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கும் இன்று காலை முதல் இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக நேற்று இரவு முதலே இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

* புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்
உலகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே நேற்றுமுன்தினம் இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பாடல்களை பாடியபடி காத்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணியளவில் பக்தர்கள் அனைவரும் ‘ஹேப்பி நியூ இயர்’ என உற்சாகமாக கூச்சலிட்டு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

* 2025ம் ஆண்டில் 13.52 கோடி லட்டுகள் விற்பனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசித்திபெற்ற பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. 2025ம் ஆண்டில் லட்டு பிரசாத விற்பனையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை படைத்துள்ளது. 2024ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாக பக்தர்களுக்கு லட்டு விற்கப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்டன.

2025ம் ஆண்டில் தேவஸ்தானம் 13.52 கோடி லட்டுகளை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.37 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு கூடுதல் விற்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2025ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று பக்தர்கள் அதிகபட்சமாக 5.13 லட்சம் லட்டுகளை வாங்கினார்கள்.

Related Stories: