அரியானா எம்பிபிஎஸ் தேர்வில் முறைகேடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சண்டிகர்: அரியானாவில் எம்பிபிஎஸ் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நடந்த மருத்துவ தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தன் எக்ஸ் பதிவில், “அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள பண்டிட் பகவத் தயாள் சர்மா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடந்த மருத்துவ தேர்வுக்கான விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பான அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் மாணவர்களின் வாட்ஸ்அப்பில் வௌியாகி உள்ளன.

பதில்களை மாற்றுவதற்கு அழிக்க கூடிய மை பயன்படுத்தப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் 17 ஊழியர்கள், 24 மாணவர்கள் உள்பட 41 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கல்வியில் நடக்கும் ஊழல்கள், நோயாளிகளின் உயிரையே பறிக்கும், பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடும். மருத்துவ கல்வி என்பது வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்புடையது, இதை சரி செய்வது வெறும் திட்டமாக மட்டுமே இருக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.

Related Stories: