கரூர், ஜன.1: தமிழகத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட போலீசார்களின் ஏற்பாட்டின் பேரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், மனோகரா கார்னர், கோவை சாலை, வேலுசாமிபுரம், வடிவேல் நகர், சணப்பிரட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா உத்தரவின்பேரில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். அதன்படி, கரூர் மாவட்டம் முழுதும் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 700 போலீசார், ஆலயங்கள், கல்லூரிகள், முக்கிய கோயில்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகளவு நடமாடும் பகுதிகள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
மேலும், அனைத்து கோயில்களிலும் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெறவுள்ளதால் அந்த பகுதியிலும் எஸ்பி உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த புத்தாண்டை எந்தவித பயமின்றி கொண்டாட வேண்டும் எனவும், அனைவரும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ஏதாவது அசம்பாவித செயல்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்பி சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கருர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் எந்தவித பயமும் இன்றி 2026ம் ஆண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
