குளித்தலை, ஜன.1: கரூர் மாவட்டம் இனுங்கூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில், விவசாயிகளின் நிறை குறைகளை கேட்டறியும் கள ஆய்வு மற்றும் தீர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், வேளாண்மை உதவி இயக்குநர் குமரன், வட்டார வேளாண்மை அலுவலர் கணேசன் உதவி வேளாண் அலுவலர்கள் அருண்குமரன், தனபால், தொழில்நுட்ப மேலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
கூட்டத்தில் விவசாயிகள், நீர்மேலாண்மை, நுண்ணீர் பாசன வசதி, மானிய உதவித்திட்டங்கள், மண்வள பாதுகாப்பு, இயற்கை உர பயன்பாடு மற்றும் பயிர் பாதுகாப்பு தொடர்பான குறைகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், புதிய நீர் ஆதார கட்டமைப்பு உருவாக்கம், அரசின் மானிய வழிகாட்டுதல்கள், மண்வளம் காக்கும் இயற்கை உரமுறைகள், பயிர் விளைச்சல் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு விளக்கினார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டு, விவசாயிகளின் கருத்துகள், அதிகாரிகளின் தீர்வு நடைமுறைகள், திட்ட செயல்பாட்டு வடிவம் ஆகியவற்றை நேரடியாக கள அனுபவமாக பதிவு செய்தனர்.
அதிகாரிகளுடன் இணைந்து விவசாய தேவைகளை கேட்டறிந்து, தீர்வு வழங்கும் அணுகுமுறையை மாணவிகள் கவனித்தது வேளாண் கல்விக்கு சிறந்த களப் பயிற்சியாக அமைந்தது. கிராம அளவில் நீர் வளம் மற்றும் மண் வளத்தை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை உயர்த்துதல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதலாகும். நிறைவில், திட்டப் பயன்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் துறை ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
