சில்லி பாய்ன்ட்…

* 50 கோடியை கடந்த டி20 பார்வையாளர்கள்
புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 போட்டிகள் இந்தியா, இலங்கை நாடுகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை இதுவரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளதாக, ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் போட்டிகள் உலகளவில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய மைல் கல்’ என தெரிவித்துள்ளார்.

* பிரேக் செஸ்சில் குகேஷ் தோல்வி
பிரேக்: பிரேக் சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் பிரிவின் 6வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டரும் நடப்பு சாம்பியனுமான அரவிந்த் சிதம்பரத்துடன் நேற்று மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய அரவிந்த் அட்டகாச வெற்றியை பதிவு செய்தார். சமீப காலமாக நடந்து வரும் போட்டிகளில் குகேஷ் மோசமான தோல்விகளை எதிர்கொண்டு வருகிறார். அதன் காரணமாக, ஃபிடே ரேட்டிங்கில் 50 புள்ளிகளுக்கும் மேல் அவர் இழந்துள்ளார்.

* பின்தொடை காயத்தால் ரொனால்டோ அவதி
ரியாத்: சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, போர்ச்சுகலை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் அல்-ஃபயா அணியை, 3-1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் வென்றது. அந்த போட்டியின்போது, ரொனால்டோவின் தொடை பின்புறத்தில் (ஹாம்ஸ்டிரிங்) ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீண்டும் எப்போது ஆட வருவார் என்பது பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை. ரொனால்டோ மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக, அல் நஸர் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: