சில்லிபாயிண்ட்…

* டொனால்ட் டிரம்புடன் மெஸ்ஸி சந்திப்பு
வாஷிங்டன்: கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், அவர் கேப்டனாக ஆடி வரும் இன்டர் மயாமி அணி வீரர்களும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்று, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த ஆண்டு மேஜர் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதற்கு மெஸ்ஸியையும், அவரது அணியினரையும், டிரம்ப் பாராட்டி பேசினார். கடந்தாண்டு டிசம்பரில் நடந்த மேஜர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் இன்டர் மயாமி சாம்பியன் பட்டம் பெற்றதோடு, அந்த போட்டிகளின் மதிப்பு மிக்க வீரர் என்ற கவுரவமும், மெஸ்ஸிக்கு 2வது ஆண்டாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* கூடைப்பந்து வீரர் லெப்ரான் சாதனை
டென்வர்: அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், அதிக கோல் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 1989ம் ஆண்டு வரை, 20 ஆண்டுகளாக ஆடி 15837 கோல்கள் அடித்து தேசிய கூடைப்பந்து சங்க (என்பிஏ) வீரர்களில் அதிக கோல்கள் போட்ட வீரர் என்ற சாதனையை மற்றொரு அமெரிக்க வீரர் கரீம் அப்துல் ஜப்பாரின் படைத்திருந்தார். அந்த சாதனையை, தற்போது லெப்ரான் ஜேம்ஸ் முறியடித்துள்ளார். 23வது என்பிஏ போட்டிகளின்போது, போட்ட கோல்களை சேர்த்து, தற்போது லெப்ரானின் கோல் எண்ணிக்கை 15838 ஆக உயர்ந்துள்ளது.

* சிறந்த வீரர் விருதுக்கு சாம்சன் பெயர் பரிந்துரை
துபாய்: உலகக் கோப்பை டி20 போட்டியின் சிறந்த வீரர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட 8 வீரர்களில் ஒருவராக இந்திய வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், செமிபைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், சஞ்சு சாம்சன் அதிரடி ரன் வேட்டை நடத்தி, இந்தியா இறுதிப் போட்டிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்தார்.

அவரைத் தவிர, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ், பாக். வீரர் ஷாகிப்ஸதா ஃபர்ஹான், தென் ஆப்ரிக்காவின் லுங்கி நிகிடி, கேப்டன் அய்டன் மார்க்ரம், நியூசி ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, பேட்டர் டிம் செபெர்ட், அமெரிக்க பந்து வீச்சாளர் ஷேட்லி வான் ஷால்க்விக் ஆகியோர் பெயர்களும் ஐசிசியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Related Stories: