ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் விறுவிறு போட்டியில் மிளிர்ந்த மியாஸாகி: காலிறுதிக்கு முன்னேற்றம்

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஜப்பான் வீராங்கனை டொமோகா மியாஸாகி அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் ரவுண்ட் 16 சுற்றுப் போட்டியில் ஜப்பான் வீராங்கனைகள் டோமோகா மியாஸாகி, ரிகோ கூன்சி மோதினர்.

ஆக்ரோஷமாக ஆடிய இரு வீராங்கனைகளும் முதல் இரு செட்களை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டை மியாஸாகி வசப்படுத்தினார். அதனால், 18-21, 21-15, 24-22 என்ற செட் கணக்கில் வென்ற மியாஸாகி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை சென் யூஃபெய், தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோசுவாங் மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக ஆடி புள்ளிகளை பெற்ற போதும், அந்த செட்டை 23-21 என்ற கணக்கில் சென் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சுதாரித்து அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய சென், 21-11 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்குள் நுழைந்தார்.

Related Stories: