கொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று, சென்னையின் எப்சி அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. சென்னை அணி, கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்த போட்டியில் மும்பையிடம் 1-0 என்ற கணக்கிலும், பிப். 23ம் தேதி மோகன் பகான் அணியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியை தழுவியது.
இம்மாதம் 1ம் தேதி சென்னை – ஒடிசா இடையே நடந்த போட்டி டிரா ஆனது. இந்நிலையில், சென்னை – கேரளா அணிகள் இடையிலான போட்டி, கொச்சியில் இன்று நடைபெற உள்ளது. இதுவரை வெற்றி பெற முடியாத இரு அணிகளும் இன்று மோதுவதால், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களம் காணும்.
இப்போட்டியை அடுத்து, வரும் 22ம் தேதி, சென்னையில் நடக்கும் போட்டியில் சென்னையின் எப்சி அணி, கோவா அணியுடன் மோதவுள்ளது. சென்னை – கேரளா அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை 7லும், கேரளா 8லும் வென்றுள்ளன. 9 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
