காஞ்சிபுரம்: எடப்பாடியின் முகவர்போல் அன்புமணி செயல்படுகிறார் என காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஏற்பாட்டில், காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: விவசாய சங்கங்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி வேளாண் 2.0 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாரத்தில் வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கிராம ஊராட்சிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளை சந்திக்கவேண்டும். பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து குறைகளை கேட்கவேண்டும். வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் புகார் குறித்த நடவடிக்கை, விளக்கங்களை அளிக்கவேண்டும். அதிகாரிகள் களத்திற்கு செல்லவேண்டும் என்பதே இதன் நோக்க மாகும். பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு விவசாயம் செய்த அனுபவம் கிடையாது.
அவர் எடப்பாடி பழனிசாமியின் முகவர் போலவும், அதிமுகவின் பி-டீம் போலவும் செயல்பட்டு அரசுக்கு எதிராக பேசுகிறார். வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்தான். கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக அவசரமாக 10.5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் செய்ததால் நீதிமன்றத்தில் நிற்கவில்லை. அதிமுக ஆட்சியில்தான் போதைப்பழக்கம் அதிகரித்தது. குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் விட்டுச்சென்ற பிரச்னையை திமுக அரசு களையெடுத்து தடுத்து வருகிறது.
இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் போதை பழக்கத்திலிருந்து மீட்கவும் துணை முதலமைச்சர் கிராமந்தோறும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். தமிழர் கலாசாரம் மற்றும் வீரவிளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார். இதில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா, மேயர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
