நாங்குநேரி அருகே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிய லாரி சிறைபிடிப்பு

களக்காடு, டிச. 31: நாங்குநேரி அருகே நம்பியாற்றின் கரையோரம் வெளி மாவட்டத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்து, கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் தளபதிசமுத்திரம், நம்பியாற்றின் கரையோரமாக பிளாஸ்டிக் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து மூடை மூடையாக கொட்டிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர். பின்னர் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைதொடர்ந்து விரைந்து வந்த போலீசார் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நம்பியாற்றின் கரையோரம் உள்ள பட்டா இடங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் மர்மநபர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரித்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: