தேசிய விவசாயிகள் தினம் கொண்டாட்டம்

கமுதி, டிச. 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் அகமதுயாசின் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியை சரண்யா வரவேற்று பேசினார்.

கல்லூரி முதல்வர் ராமர் முன்னேற்றத்திற்காகவும் மற்றும் சமூக நலத்திற்காகவும் விவசாயிகள் ஆற்றும் முக்கியப் பங்களிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுர மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாஸ்கரமணியன் கலந்து கொண்டு விவசாயச் சவால்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற சமூகங்கள் மீது மரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகளை வலியுறுத்தினார்.

தொடர்ந்து நோய் மேலாண்மை குறித்து மோனிகா நிவாஸ், சரண்யா, சீதாலட்சுமி, மஞ்சு மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொழிநுட்ப சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து விவசாய பெருமக்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக உதவி பேராசிரியர் ரஞ்சிதம் நன்றி கூறினார். இவ்விழாவில் பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: