*விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்துள்ள நிலையில், அதிக பனிப்பொழிவு மற்றும் இதமான வெயிலால் ஒரே நேரத்தில் பூத்து குலுங்குகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தொப்பூர், வெண்ணாம்பட்டி, குள்ளனூர், கடகத்தூர், சோகத்தூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால், கொத்தமல்லி சீராக வளர்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கொத்தமல்லி பூத்து குலுங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் தேனுக்காக தேனீக்கள் தோட்டத்தில் முகாமிட்டு ரிங்காரமிட்டு வருவது கவர்ந்திழுப்பதாக உள்ளது. கொத்தமல்லி பயிர் சீராக பூத்து குலுங்குவதால் கூடுதலாக மணிகள் பிடித்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
