ஊட்டி : குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளுக்கு பின் கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 736 வாக்குச்சாவடி மையங்களிலும்,நேற்று முன்தினம் மற்றும் நேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஒரசோலை மற்றும் நல்லாயன் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும்,பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மேப்பிங் செய்ய இயலாத நபர்களின் விவரங்களை கேட்டறிந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள், இணையதளத்தின் மூலம் தங்களது பெயர் இருப்பதை, கைப்பேசி வாயிலாக தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் வாக்காளர்களின் பெற்றோர்களின் விவரங்களை பெற்று, அதனை மேப்பிங் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள பிறப்பு சான்றிதழ்,சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று வழங்கலாம் என்பது குறித்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும், பழங்குடியினர்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தவறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டு பிஎல்ஒ ஆப்பில் பதிவு செய்வது மட்டுமல்லாமல், அவர்கள் எந்த இடத்திற்கு, எந்த தேதியில், எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பொதுமக்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ஆவணங்களுடன் எளிதாக அணுகும் வகையில், பொதுவான இடத்தினை தேர்வு செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, கோத்தகிரி வட்டாட்சியர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
