சீர்காழி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக பனங்கிழங்குகள் அறுவடை

*அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி : தமிழகத்தில் பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள். பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் இடம்பெற்றிருக்கும்.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்படுகிறது.

இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும். பனை மரங்களை அதிகளவில் வெட்டி செங்கல் கால்வாய்க்கு பயன்படுத்தப்படுவதால் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பனை மரங்களை வெட்டக்கூடாது என தடை விதித்துள்ளது. இதனால் தற்போது விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு பனை விதைகள் நடும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால், சீர்காழி அருகே வேட்டங்குடி, எடமணல் தேவரோடை , வரிசை பத்து உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை விவசாயிகள் சீர்காழி நகர் பகுதிக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். சீசனில் மட்டுமே கிடைக்கும் பனங்கிழங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து கேவரோடை விவசாயி வெங்கடேசன் கூறுகையில் ”பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு ரூ. 4 முதல் ரூ 6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி சென்று பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பனங்கிழங்கு சாகுபடி உதவி வருகிறது.தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனை தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்\” என்றார்.

Related Stories: