தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அரிய வகை பாத்திரங்கள் கண்டுபிடிப்பு

*அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு

தஞ்சாவூர் : தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில பூட்டிக்கிடந்த கட்டிடத்தை திறந்து பார்த்த போது 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமையான பாத்திரங்கள் கிடைத்தது. இதில் ஒரு பகுதி அருங்காட்சியகத்திற்கும் மற்றொரு பகுதி ஏலம் விடப்பட்ட வகையில் ரூ.9 லட்சம் கிடைத்தது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செடி, கொடிகள் மண்டிக்காணப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 2 கட்டிடங்கள் பூட்டியே கிடந்தன. இதைப்பார்த்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, அந்த கட்டிடங்களை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில், அங்கு மண்டி கிடந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

இதன் காரணமாக பொக்ளைன் எந்திரம் மூலம் செடி, கொடிகள், புதர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.இந்த பணிகள் முடிவடைந்தவுடன் அங்கிருந்த கட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெரிய அளவிலான பழைய பாத்திரங்கள் இருந்தது.

தேக்சா, இட்டி கொப்பறை, காபி வடிகட்டி, டீ பாய்லர், பால் கேன்கள், அண்டா, கொப்பறை, எண்ணெய் சட்டி, மண்எண்ணெய் அளக்கும் பல்வேறு அளவீடு கொண்ட குவளை, பால் குவளை, அரிசி அளக்கும் படிகள் என ஏராளமான பாத்திரங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த பாத்திரங்கள் அனைத்தும் செம்பு, பித்தளை, அலுமினியம் செய்யப்பட்டு, அதிக எடை கொண்டதாகவும், அளவில் பெரியனவாகவும் இருந்தது. மருத்துவமனையில் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் என்பதும் தெரிய வந்தது.

தற்போதைய காலக்கட்டத்தில் இது போன்ற பாத்திரங்களை பார்ப்பது என்பது அரிது. இந்த நிலையில் தமிழக அரசு தூய்மை திட்டம் 4.0 என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த திட்டத்தில் மருத்துவமனைகளில் பழமையான, உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பொருட்கள், பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள், அட்டைப்பெட்டிகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறும், நல்ல விலை போகும் பொருட்களை ஏலமிடுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பாத்திரங்கள் பழமையானதாகவும், அரிதானதாகவும் இருந்ததால் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் வந்த ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பொருட்களில் அதிக விலை உடைய செம்பு பொருட்கள், அலுமினியம் மற்றும் பித்தளை பொருட்கள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என தெரிய வந்தது.

இதையடுத்து அரிதாக காணப்படும் அண்டா, இட்லி கொப்பறை, பால்கேன், கடாய், அலுமினிய டிபன் கேரியர், தண்ணீர் ஊற்றும் குவளை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அருங்காட்சியகத்தில் வைப்பது எனவும், மீதமுள்ள பொருட்களை ஏலமிடவும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருட்களை தவிர மீதமுள்ள பொருட்கள் ஏலமிடப்பட்டன. இதன் மூலம் ரூ.9 லட்சம் மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்ததாக முதல்வர் பூவதி கூறினார்.

Related Stories: