கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வன்முறை; சட்டீஸ்கரில் வணிக வளாகத்தை அடித்து நொறுக்கிய 40 பேர் மீது வழக்கு: பாஜக ஆளும் மாநிலங்களில் அடாவடி

 

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தின் போது ராய்ப்பூர் வணிக வளாகத்தில் புகுந்த மர்ம கும்பல் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் கான்கேர் மாவட்டத்தில் நடந்த மோதல்கள் மற்றும் மத மாற்றத்தை கண்டிப்பதாகக் கூறி பஜ்ரங் தளம் மற்றும் சர்வ இந்து சமாஜ் அமைப்புகள் சார்பில் நேற்று முன் தினம் (24ம் தேதி) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது ராய்ப்பூரில் விஐபி சாலையில் உள்ள மேக்னட்டோ வணிக வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில் முகமூடி அணிந்த 30 முதல் 40 பேர் கொண்ட கும்பல் கையில் தடி மற்றும் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது.

அந்த கும்பல் அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரங்கள், அலங்கார மின் விளக்குகள் மற்றும் சாண்டா கிளாஸ் உருவங்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும் அங்கிருந்த ஊழியர்களை வழிமறித்து அவர்களின் மதம் மற்றும் பெயர்களை கேட்டு மிரட்டியதுடன், அடையாள அட்டைகளையும் சோதனையிட்டனர். குறிப்பாக இந்து அல்லாத ஊழியர்களை அந்த கும்பல் கடுமையாக மிரட்டியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலால் வணிக வளாகத்திற்கு சுமார் 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தெலிபந்தா காவல் நிலைய போலீசார், அடையாளம் தெரியாத 40 பேர்
மீது கலவரம் செய்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் வாகன எண்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், ‘பாஜக தலைமையிலான அரசு வன்முறை கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதால் சகிப்புத்தன்மையற்ற சூழல் உருவாகியுள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் நாடு முழுவதும் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பது அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல் என்று வேதனை தெரிவித்துள்ளது.

அசாம் பள்ளியில் அட்டகாசம்
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நிலையில், அங்குள்ள பனிகாவூன் கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலப் பள்ளியில் 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தது. பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள், விளக்குகள் மற்றும் பதாகைகளை அந்த கும்பல் கிழித்து எறிந்து தீயிட்டு கொளுத்தியதுடன், அங்கிருந்த கிறிஸ்துமஸ் குடில் மற்றும் ஏசு கிறிஸ்துவின் சிலையையும் சேதப்படுத்தியது.

பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டது மட்டுமின்றி நல்பாரி நகரில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குச் சென்ற அந்த கும்பல், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் தொப்பிகள் மற்றும் முகமூடிகளையும் தீயிட்டு எரித்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் பாதிரியார் பைஜு செபாஸ்டியன் அளித்த புகாரின் பேரில் பெல்சோர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: