மைசூரு: மைசூரு அரண்மனை அருகே பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்; சுற்றுலா பயணிகள் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை பகுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் குளிர்கால திருவிழாவையொட்டி மலர் கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில், அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா நுழைவாயில் அருகே இரவு 8.30 மணியளவில் மிதிவண்டியில் வைக்கப்பட்டிருந்த பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கேட்ட இந்த வெடி சத்தத்தால் அப்பகுதியே அதிர்ந்ததுடன், அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த கோர விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த பலூன் வியாபாரி சலீம் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகளான பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் லட்சுமி என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
