மும்பையில் 23 மாடி குடியிருப்பில் தீ விபத்தில் சிக்கிய தயாரிப்பாளரை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நடிகை

 

 

மும்பை: மும்பை அந்தேரி மேற்கில் உள்ள 23 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய திரைப்படத் தயாரிப்பாளர் சந்தீப் சிங் உள்ளிட்ட 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி மேற்கு வீரா தேசாய் சாலையில் அமைந்துள்ள சாரண்டோ டவர் என்ற 23 மாடிக் குடியிருப்பில் நேற்று மின்சார வயர்கள் செல்லும் பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 10வது மாடி முதல் 21வது மாடி வரை மளமளவென பரவிய தீயால், 12, 13 மற்றும் 14வது தளங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 16வது மாடியில் உள்ள பாதுகாப்புப் பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த 40 பேரை படிக்கட்டுகள் வழியாகப் பத்திரமாக மீட்டனர். மேலும் 15வது மாடியில் சிக்கியிருந்த 3 பேரை சுவாசக் கருவிகள் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 14வது தளத்தில், ‘மேரி கோம்’ திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் சந்தீப் சிங் வசித்து வருகிறார். குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பியிருந்த அவர், தீ விபத்தில் சிக்கியிருந்தாலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இருப்பினும், தகவல் அறிந்ததும் அவரது நெருங்கிய நண்பர்களான நடிகை அங்கிதா லோகண்டே மற்றும் அவரது கணவர் விக்கி ஜெயின் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று அவரை பாதுகாப்பாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: