கள்ளக்காதலிக்காக மனைவி மகனை கொன்ற கணவன்: ஒரு மாதத்திற்கு பின் குடும்பத்தினருடன் கைது

 

கொண்டகாவ்: சட்டீஸ்கரில் கள்ளக்காதலிக்காக மனைவியையும், 3 வயது குழந்தையையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகித் சேத்தியா என்பவருக்கும், பகவதி என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், ரோகித் சேத்தியாவிற்கு வசந்தி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் மனைவியை விவாகரத்து செய்யுமாறு ரோகித்தின் குடும்பத்தினர் மற்றும் கள்ளக்காதலி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

ஆனால், விவாகரத்து அளித்தால் நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் 5,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டியிருக்கும் என்பதால், அதனைத் தவிர்க்க ரோகித் தனது மனைவியையும் குழந்தையையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். திட்டமிட்டபடி கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி ஒடிசா மாநில எல்லைக்கு அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மனைவியையும், மகனையும் ரோகித் அழைத்துச் சென்றார். அங்கு இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவர், மனைவி பகவதியின் உடலை கல்லில் கட்டி இந்திராவதி ஆற்றில் வீசியதுடன், குழந்தையின் உடலை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டார்.

கடந்த 3ம் தேதி அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, செல்போன் சிக்னல் மற்றும் அழைப்பு விபரங்களை வைத்து போலீசார் ஒரு மாதமாகத் தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், கொலைக்கு மூளையாக செயல்பட்ட கணவன் ரோகித், கள்ளக்காதலி வசந்தி, ரோகித்தின் பெற்றோர் ரமேஷ் சந்திரா, ஊர்மிளா மற்றும் உடந்தையாக இருந்த 3 கூட்டாளிகள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பகவதி வரதட்சணை கொடுமை மற்றும் சித்ரவதைக்கு ஆளாகி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: