போடி, டிச.24: போடி அருகே மூதாட்டியை தாக்கிய மகள், மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் அழகுத்தாய்(65). இவரது மகள் கவிதா, மருமகன் சந்திரன் போடி ஜக்கம்மநாயக்கன்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.இவர்களது மகள் சமீபத்தில் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு அழகுத்தாய் உடந்தையாக இருந்ததாக, அவரது மகள், மருமகன் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் அழகுத்தாயின் வீட்டிற்கு வந்த மகள், மருமகன் அவரை அவதூறாக பேசி, கம்பி, கம்புகளால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அழகுத்தாய் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் அழகுத்தாய் புகார் அளித்தார். எஸ்.ஐ மாயாண்டி கவிதா, சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
