சென்னை: தமிழகத்தில் 24 துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.3,17,693 கோடியில் 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான பயன்தரக்கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களான முத்திரைத் திட்டங்களை குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கும், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அத்திட்டங்களின் முன்னேற்றத்தினை கண்காணித்திட தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் 155 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் பல புதிய திட்டங்களும் சேர்க்கப்பட்டு தற்போது 24 துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.3,17,693 கோடி மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள திட்டப் பணிகள் நடந்து வருகிறது. 6 துறைகளைச் சார்ந்த சுமார் ரூ.87,941 கோடி செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து செயல்படுத்தி ஜனவரி 2026க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
கூட்டுக் குடிநீர் திட்டங்கள், ஏரி மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையப் பணிகள், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் பிற துறைகளின் முத்திரைத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். அத்துடன், மதுரை, வண்டியூர் ஏரி மேம்பாட்டுத் திட்டத்தினையும் விரைந்து முடித்திட வேண்டும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குத்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, அப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதுபோல, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து நெடுஞ்சாலையை கடப்பதற்கான வான்வழி நடைபாதை பணியினையும் விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பணியினை பிப்ரவரி 2026க்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இதுபோன்று, 6 துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பிற முத்திரைத் திட்டங்களையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபால், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயலாளர் சித்திக், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், போக்குவரத்துத் துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர் பிரகாஷ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
