நெல்லையில் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பார்வையிட அனுமதி: பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் வசதி

நெல்லை: நெல்லை ரெட்டியார்பட்டியில் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஆதிச்சநல்லூர், சிவகங்கை, கொற்கை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி கரையில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20ம் தேதி திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை பார்வையிடலாம். செவ்வாய் கிழமை விடுமுறை. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.20ம், சிறுவர்களுக்கு ரூ.10ம், பள்ளிகளில் இருந்து மொத்தமாக சீருடையில் வரும் மாணவர்களுக்கு சலுகை அடிப்படையிலும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக இன்று முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை மற்றும் மாலையில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. மற்ற பயணிகளுக்கு ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 1 மணி நேரத்திற்கு 1 பஸ், கூட்டத்தை பொறுத்து 30 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கவும் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: