கோயிலில் மேற்கூரை வசதி கேட்டு வழக்கு நீதிமன்றத்தை பிரசார மேடையாக்குவதா? மனுதாரருக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமாள் கோயிலில் மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தற்போது மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது. கூடுதல் வசதிகள் தேவைப்பட்டாலும் அதனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது செய்யப்பட்டுள்ள நிழற்குடைகள் பக்தர்களுக்கு போதுமானதாக இருக்காது. மேலும் விரிவுப்படுத்தி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: