கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

நல்லம்பள்ளி, டிச.23: பாலஜங்கமன அள்ளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலஜங்கமனஅள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய பள்ளி கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ பங்கேற்று, ரிப்பன் வெட்டி வகுப்பறைகளை திறந்து வைத்தார். முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: