குன்றத்தூர், டிச.24: திருமணமான 9 நாட்களில் குடும்ப தகராறில், மனைவியை கொன்று, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குன்றத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, தளபதி தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர் விஜய் (25). சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர், தன்னுடன் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியரான யுவ (24) என்பவரை காதலித்து, கடந்த 13ம் தேதி திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் வெகுநேரம் ஆகியும் வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த யுவயின் தங்கை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலில் யுவ இறந்த நிலையிலும், விஜய் தூக்கில் சடலமாக தொங்கியதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்த 2 பேரும், காதலித்து கடந்த 13ம் தேதி திருமணம் செய்துகொண்டு, இங்குள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். விஜய்க்கு, யுவ தவிர வேறு சில பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது, மனைவி யுவஸ்ரீக்கு தெரிய வரவே, அதுகுறித்து விஜயிடம் கேள்வி கேட்டபோது, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஜய், மனைவி யுவஸ்ரீ முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
