சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு பெண் வழக்கறிஞர் உள்பட 9 வழக்கறிஞர்களின் பெயர்கள், நீதிபதி பணியிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐகோர்ட் கொலீஜியம் குழுவில் நீதிபதி நிஷா பானு இடம்பெற்ற நிலையில் அவரது பங்களிப்பின்றி பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் நீதிபதி நிஷா பானு கேரளாவுக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் இன்னும் அங்கு பதவியேற்காமல் விடுப்பில் உள்ளார். கேரள ஐகோர்ட்டில் பதவியேற்காததால் உயர்நீதிமன்ற கொலீஜியம் குழுவில் நீதிபதி நிஷா பானு இன்னும் தொடர்கிறார். அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின்னர் 2026 ஜனவரியில் ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்கள் அனைத்தும் நிரம்பிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 55 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். 24 நபர்களும் நியமிக்கப்பட்டால் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக சென்னை உயர்நீதிமன்றம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
