வேலூர்: வேலூர் புரம் பொற்கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்து, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு ராணுவ விமானம் மூலம் வந்தார். தொடர்ந்து அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கு அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சுப்புலட்சுமி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் பொற்கோயில் சார்பில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தர்ராஜன், நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதையுடன் ஜனாதிபதியை வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கமலாநிவாஸ் விருந்தினர் இல்லத்துக்கு சென்ற ஜனாபதி திரவுபதி முர்மு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் 11.50 மணிக்கு பொற்கோயிலுக்கு வந்தார்.
பொற்கோயிலில் வெள்ளி விநாயகர், லட்சுமி நாராயணி தாயார், னிவாச பெருமாள், மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து வைபவ லட்சுமிக்கு தனது கரங்களால் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு மூலவர் சன்னதியில் சடாரி வைத்து சக்தி அம்மா ஆசி வழங்கினார். மேலும் பட்டு வஸ்திரம் மற்றும் பிரசாதம் வழங்கினார். பின்னர் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மிகப்பெரிய நடராஜ பெருமானையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபட்டார்.
இதையடுத்து பொற்கோயில் வளாகத்தை சுற்றிப்பார்த்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயில் வளாகத்தில் சக்தி அம்மா முன்னிலையில் மரக்கன்று நட்டார். தொடர்ந்து பொற்கோயில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் 12.50 மணியளவில் ஹெலிபேட் வந்தடைந்தார். தொடர்ந்து மதியம் 1 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
