விருதுநகர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடி எத்தனை? கணக்கெடுப்பு பணி தீவிரம்

விருதுநகர், டிச. 17: சட்டமன்ற தேர்தலையொட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை முழு வீச்சில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று முடிந்த நிலையில் நாளை மறு நாள் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. போலீசார், தேர்தல் பிரிவு வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே போலீசார் சார்பில் பிரச்சினைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்சனை ஏற்படும் கிராமங்கள், சாதி, மத ரீதியாக பிரச்சினைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஸ்டேசன்வாரியாக அந்த ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சினைக்குரிய கிராமங்கள், நபர்கள், ரவுடிகள் லிஸ்ட் சேகரிக்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காலங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா அல்லது என்ன பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில் 1200 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைப்பது, பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் கடந்த தேர்தல்களில் கூடுதல் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து அதே சூழ்நிலை உள்ளதா, இல்லை நிலை மாறியுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் சார்பில் அதிக வாக்குப்பதிவு மற்றும் குறைவான வாக்குப்பதிவு இடங்கள் இரண்டுமே பிரச்சினைக்குரியதாகவும், பதட்டமானவையாகவும் கணக்கில் எடுத்து வருகிறோம். தற்போதுள்ள எண்ணிக்கை குறையவோ அல்லது கூடவோ செய்யலாம். இது போன்ற இடங்களில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மற்ற இடங்களை போலவே வாக்குப்பதிவு நடப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடிகளை இறுதி செய்வது மற்றும் அங்கு அடிப்படை வசதிகள் செய்வது உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது என்றார்.

Related Stories: