விருத்தாசலத்தில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் சீமான், ஆதரவாளர்கள் உள்பட 15 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், டிச. 17: விருத்தாசலத்தில் திமுக பிரமுகரை தாக்கியதாக சீமான் மற்றும் ஆதரவாளர்கள் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மாநாடு முடிந்து காரில் ஏறி புறப்பட்டபோது அருகில் நின்று கொண்டிருந்த திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரான ரங்கநாதன் என்பவர், சீமான் சென்ற காரை வழிமறித்து, சீமானிடம் பேசி உள்ளார். இதனால் சீமான் தனது வாகனத்தில் இருந்து இறங்கியபோது அவருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திடீரென திமுக நிர்வாகி ரங்கநாதனை சரமாரி தாக்கினர்.

தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து சீமானும் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி
வைத்தனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விருத்தாசலம் பொன்னேரி- சித்தலூர் புறவழிச் சாலையில் சீமானை திட்டியவர் மீது வழக்கு பதிய வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து திமுக பிரமுகர் ரங்கநாதன் தன்னை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரில் சீமான் உள்பட 15 பேர் மீது ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ராஜதுரை அளித்த புகாரின் மீது, திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் 2 பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.

Related Stories: