ராமநாதபுரம் வடக்கு பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

திண்டுக்கல், டிச. 16:ராமநாதபுரம் வடக்கு பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார். ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

அப்போது அம்பாத்துரை ஊராட்சி ஏ.ராமநாதபுரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு பேவர் பிளாக்சாலை, தெருக்களுக்கு மின் விளக்கு வசதி, மற்றும் தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலுக்கு, ஆழ்துளைக் கிணறு வசதி, சுற்றுச்சுவர் வசதி செய்து கொடுப்பதுடன் அருகில் உள்ள குளத்தை தூர்வார வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர். கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தங்கள் கிராமத்தின் கோரிக்கையை நிறைவேற்ற உத்திரவிட்ட அமைச்சருக்கு ராமநாதபுரம் வடக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது சின்னாளபட்டியைச் சேர்ந்த மொழிப்போர் தியாகியும், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவருமான ராமுராமசாமி தனக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கவேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். உடனடியாக அமைச்சர் ஐ.பெரியசாமி ராமுராமசாமிக்கு நிதி உதவி வழங்கியதுடன் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடு செய்தார். தனக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மொழிப்போர் தியாகி ராமுராமசாமி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அமைச்சரின் உதவியாளர் வத்தலக்குண்டு ஹரிஹரன், மாநகர பொருளாளர் மீடியா சரவணன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், மணிகண்டன், பிள்ளையார்நத்தம் முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலர் வடிவேல் முருகன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: