சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பயண நேரத்தை மிச்சப்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது, நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவான இணைப்பு வழங்குவது, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை அளிப்பது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது சென்னையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, இலக்கை விரைவாக அடைய உதவுகிறது. இது பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து, தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில்,சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 240 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2,000 கோடி) கடன் உதவி அளித்துள்ளது. இது சென்னை மாநகரப் பகுதி மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த நிதி உதவி சென்னை மெட்ரோ ரயில் முதலீட்டுத் திட்டத்தின் 2ம் கட்ட நிதியாகும்.
2022ம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கி இத்திட்டத்திற்கு மொத்தம் 780 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது. முதல் கட்டமாக 350 மில்லியன் டாலர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த 2ம் கட்ட நிதி மூலம் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 மெட்ரோ பாதைகளின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படும். இதில் மேம்பாலம் மற்றும் நிலத்தடி பாதைகள் இரண்டும் அடங்கும். 18 புதிய மெட்ரோ நிலையங்கள் கட்டப்படும். இந்த நிலையங்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வலிமையுடனும் வடிவமைக்கப்படவுள்ளது. பாதை 3 சோழிங்கநல்லூர் – சிப்காட்-2 பகுதி (மேம்பாலம்), பாதை 4 கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் பகுதி (நிலத்தடி), பாதை 5 மின்சாரம், இழுவை அமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கூடுதல் வசதிகளாக மெட்ரோ, பேருந்து போன்ற பல்வேறு போக்குவரத்து சாதனங்களுக்கு இடையே எளிதாக மாறுவதற்கான இடைமாற்று மையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் முதியவர்கள் பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. டிக்கெட் வருவாய் அல்லாத பிற வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்தி மெட்ரோவின் நீண்டகால நிதி நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் 2028ம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையின் நிலையான நகர்ப்புற போக்குவரத்து வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.
