35,582 கற்போர்களுக்கு எழுத்து தேர்வு முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்

*சிஇஓ நேரில் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறுகிறது. நேற்று 1211 மையங்களில் 35,582 கற்போர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதனை சிஇஓ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி கல்வி இயக்குனரின் அறிவுரைப்படி, நடப்பு ஆண்டில் எழுத, படிக்கத் தெரியாதவர்கள் அனைவரையும் கண்டறிந்து, அவர்களை அடிப்படை எழுத்தறிவு கல்வி கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், எழுத படிக்க தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் அடிப்படைக ல்வி கற்று கொடுக்கப்பட்டது.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 1211 மையங்களில் 35,582 கற்போர்களுக்கு அடிப்படை கல்வி கடந்த 6 மாதமாக தன்னார்வலர்கள் மூலம் கற்றுகொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும், 1211 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடந்தது. தேர்வு மையங்களில் அந்தந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்வு நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர் பள்ளி துணை ஆய்வாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை பார்வையிட்டனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் அருள் தாஸ் திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியங்களில் உள்ள தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார், தன்னார்வலர்கள் கூட்டத்தில் இந்த ஆண்டு மாநிலம் முழு எழுத்தறிவு பெறும் மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

அதற்கு அனைவரும் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அதேபோன்று அனைவரும் பணியாற்றி, இந்த மாதம் இறுதியில் (டிசம்பரில்) நாமக்கல் மாவட்டம் அனைவரும் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டதத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், அனைத்து வட்டாங்களிலும் கற்போர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வித்துறை சார்ந்த அனைத்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பணியாற்றினர்,’ என்றனர்.

Related Stories: