திருச்செங்கோடு, டிச. 15: திருச்செங்கோடு அருகே, இலுப்புலி ஊராட்சி குளத்துவளவு கிராமத்தில் பல பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியதால், மாற்று இடம் வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு மனுக்கள் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இலுப்புலி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது, தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இப்பகுதி மக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கிட்டுசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். வருகின்ற 23ம் தேதி அன்று திருச்செங்கோடு வருவாய்த்துறை அதிகாரிகள் மாற்று இடம் வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டம் நடத்துவதாக முடிவெடுத்துள்ளனர். இலுப்புலி குளத்துவளவு அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையில், ஏரியில் முற்றிலும் மழை நீர் தேங்கி வழிந்து வருவதால் அருகே குடியிருக்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
