காற்றில் வரும் ரசாயன நெடியால் அவதி

பள்ளிபாளையம், பிப்.23: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியகாடு பகுதியில் இயங்கும் தனியார் சாய ஆலையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படும்போது, கழிவுநீரியிலிருந்து வெளியாகும் குளோரின் வாயு நெடியோடு காற்றில் கலந்து, அப்பகுதியில் மாசினை ஏற்படுத்துகிறது. குளோரின் கலந்த காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு வருவதாக முதியோர் புகார் தெரிவித்து வந்தனர். நேற்று மாலை மீண்டும் ஆலையிலிருந்து வெளியேறிய நெடியால், காற்று மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து, அங்குள்ள கண்ணனூர் மாரியம்மான் கோயில் அருகே திரண்டனர். பின்னர், மறியல் போராட்டத்திற்கு தயாராகினர்.

இதுகுறித்த தகவலின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த போலீசார், புகார் மனுவாக கொடுத்தால், மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஊர்வலமாக சென்றனர். இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் மனு அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: